தமிழக அரசியல் களத்தில் முதல்முறையாகத் தேர்தல் களம் காணும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சர்வதேச மகளிர் தினமான வரும் மார்ச் 8-ஆம் தேதி தனது தேர்தல் அறிக்கையை வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக விவசாயம், மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் அளித்து, உழைக்கும் வர்க்கத்தை மையமாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், மாணவர்களுக்கு இலவசக் கையடக்கக் கணினி மற்றும் இணையச் சேவை போன்ற நவீன வாக்குறுதிகளும் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து மண்டலங்களில் மக்களிடம் நேரடியாகக் கருத்துகளைக் கேட்டு இந்தத் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தவெக தனித்துப் போட்டியிடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக மகளிர் வாக்குகளைக் கவரும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், மகளிர் தினத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண் வாக்காளர்களைக் கவர விஜய் திட்டமிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையம் தவெக-வுக்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியுள்ள நிலையில், கட்சியின் இந்த முதல் தேர்தல் அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.