உலகப் பொருளாதாரத்தில் கச்சா எண்ணெய் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. தற்போதைய சூழலில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே உருவாக்கியுள்ளது.
உலகில் அதிக கச்சா எண்ணெய் இருப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் வெனிசுலா 303 பில்லியன் பீப்பாய்களுடன் முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து சவுதி அரேபியா 267 பில்லியன் பீப்பாய்களுடனும் கனடா 170 பில்லியன் பீப்பாய்களுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தற்போது போரில் ஈடுபட்டுள்ள ஈரான் 158 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வளத்துடன் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. வளைகுடா பிராந்தியத்தில் ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் முறையே 145, 113 மற்றும் 100 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பைக் கொண்டு உலக சந்தைக்கு நிலையான விநியோகத்தை வழங்கி வருகின்றன.
ரஷ்யா மற்றும் லிபியா போன்ற நாடுகளும் குறிப்பிடத்தக்க அளவில் எண்ணெய் வளத்தைக் கொண்டுள்ளன. அமெரிக்கா எண்ணெய் இருப்பு அளவில் பின்வரிசையில் இருந்தாலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் திகழ்கிறது.
எண்ணெய் வளமிக்க நாடுகளில் நிலவும் இத்தகைய போர் பதற்றங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் மாற்றங்களை உண்டாக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் 4.5 பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இருப்பு மட்டுமே உள்ளது.
நாட்டின் தேவையில் சுமார் 85 சதவீத எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் அசாம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் உற்பத்தி நடைபெற்று வந்தாலும் அது நாட்டின் ஒட்டுமொத்த தேவைக்குப் போதுமானதாக இல்லை.
தற்போது இந்தியாவில் உள்ள கையிருப்பு சுமார் 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்பதால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் இந்த போர் சூழல் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
