மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த சனிக்கிழமை முதல் கூட்டுத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய ஈரானின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தாங்கள் மிக நீண்ட காலப் போருக்குத் தயாராகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். தொடக்கத்திலேயே தங்களின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனம் அல்ல என்றும் எதிரிகளிடம் குறிப்பிட்ட அளவு ஆயுதங்கள் மட்டுமே இருப்பதை உலகம் அறியும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போர்ச் சூழல் மோசமடைந்து வருவதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியுள்ள தனது நாட்டு குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஓமன் மற்றும் சவுதி அரேபியாவுடனான நில எல்லைகள் வழியாகவோ அல்லது தற்போது இயக்கப்படும் சர்வதேச விமானங்கள் மூலமாகவோ பாதுகாப்பாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இப்போதைக்கு வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஈரானின் நீண்ட காலப் போர் எச்சரிக்கையும் அமெரிக்காவின் இந்த அவசர வெளியேற்ற அறிவிப்பும் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
