சீனாவில் பூனைகளுக்கு உணவளிக்கும் வினோதமான ஒரு தொழிலின் மூலம், இளைஞர் ஒருவர் குறுகிய காலத்தில் பல லட்சக்கணக்கான ரூபாய்களை வருமானமாக ஈட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது, அந்நாட்டவர் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு செல்பவர்கள், தங்களது வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை (பூனைகளை) உடன் அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட ஹான் காங் என்ற இளைஞர், இந்தப் புதிய சேவையைத் தொடங்கியுள்ளார்.
வெளியூர்களுக்குச் சென்றிருக்கும் உரிமையாளர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் செல்லும் ஹான் காங், அங்கிருக்கும் பூனைகளுக்குத் தேவையான உணவுகளை வழங்கிப் பராமரிக்கிறார். இந்தப் பணிக்காக அவர் வசூலிக்கும் கட்டணமே அவருக்குப் பெரும் லாபத்தைத் தேடித் தந்துள்ளது. கடந்த சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் மட்டும் சுமார் ரூ. 21 லட்சம் வருமானத்தை ஹான் காங் ஈட்டியுள்ளார்.
பஇந்தத் தொடர் விடுமுறை நாட்களில் மட்டும் சுமார் 2,000 பூனைகளுக்கு அவர் நேரில் சென்று உணவளித்துப் பராமரித்துள்ளார். உரிமையாளர்கள் இல்லாத நேரத்தில் வீட்டின் சாவியைப் பெற்றுக்கொண்டு, மிகுந்த பொறுப்புடன் இந்தப் பணியைச் செய்து வருவதால், மக்களிடையே இவருக்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வரும் சூழலில், இத்தகைய ஆக்கபூர்வமான மற்றும் வித்தியாசமான சிந்தனைகள் மூலம் இளைஞர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற முடியும் என்பதற்கு ஹான் காங்கின் இந்தச் செயல் ஒரு முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.
