பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீர் அந்நாட்டின் அதிகாரமிக்க நபராக உருவெடுத்துள்ள சூழலில் தற்போது அங்கு வெடித்துள்ள மக்கள் போராட்டம் அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கில்கிட் மற்றும் ஸ்கர்டு பகுதிகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் அரசு அலுவலகங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய கட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் ராணுவ தளபதி ஆசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆகியோருக்கு எதிராக மக்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
அமெரிக்காவை திருப்திப்படுத்துவது மற்றும் உள்நாட்டு இஸ்லாமிய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது என இருவேறு கொள்கைகளைக் கையாண்டு வந்த ஆசிம் முனீரின் வியூகம் இந்த மோதலால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதுடன் பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
