திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக வெற்றிக் கழகம் யாராலும் அணைக்க முடியாத நெருப்பாகத் திகழ்வதாகக் குறிப்பிட்ட அவர் தமிழக அரசியலில் புதிய மாற்றமாகத் தொடங்கப்பட்ட பல கட்சிகள் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிடியில் சிக்கியுள்ளதாகச் சாடினார்.
குறிப்பாக மதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் தங்களின் தனித்துவத்தை இழந்து நிற்பதாகவும் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியை அறிவாலயத்தில் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். மேலும் வரும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க ஒரு தேசியக் கட்சியும் ஒரு மாநிலக் கட்சியும் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுமார் பன்னிரண்டரை லட்சம் புதிய வாக்காளர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் முதலமைச்சரின் வீட்டிலேயே விஜய்க்கு ஒரு வாக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். எத்தனை கூட்டணிகள் அமைக்கப்பட்டாலும் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்த முடியாது என்று தெரிவித்த அவர் விஜய் ஆகாயம் போன்றவர் என்றும் அவரை யாராலும் அசுத்தம் செய்ய முடியாது என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
