தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறி குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி,”திமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் சட்டமன்றத்திற்குள் நுழைய முடியும் என்பது காங்கிரஸ் கட்சிக்கு நன்றாகத் தெரியும். தமிழகத்தில் திமுகவுடன் கரம் கோர்த்தால் மட்டுமே காங்கிரஸுக்கு முறையான அரசியல் அந்தஸ்து கிடைக்கும். எங்களது தலைவர் கூட்டணியைச் சரியான பாதையில் வழிநடத்திச் செல்வார்; இதில் எவ்வித ஐயமும் இல்லை.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் காங்கிரஸ் இடையே திரைமறைவில் ரகசிய பேச்சுவார்த்தை நடப்பதாக வெளிவரும் தகவல்கள் வெறும் வதந்திகளே என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
எதிர்க்கணிகள் குறித்து விவரித்த அமைச்சர் ரகுபதி, அதிமுக மற்றும் பாஜக இடையிலான உறவில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை என விமர்சித்தார். “அதிமுக – பாஜக கூட்டணியில் யார் பெரிய கட்சி யார் சிறிய கட்சி என்பதே இன்னும் முடிவாகவில்லை. அவர்கள் தொகுதிப் பங்கீடு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒட்டுமொத்தமாக அதிமுக கூட்டணியில் இடியாப்ப சிக்கல் நீடிக்கிறது,” என அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.
மேலும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த மோதல்களும், கருத்துப் பரிமாற்றங்களும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
