சென்னையிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில், பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகத் திருவள்ளூர் நகராட்சி திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் ஆகிய இருவரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

திருவள்ளூர் நகராட்சி திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பரான வழக்கறிஞர் தியாகு ஆகியோர் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி சென்னையிலிருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்தனர். மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் இருவரும், விமானத்தில் பணியிலிருந்த 25 வயது பணிப்பெண்ணிடம் சைகை காட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

மேலும், அந்தப் பெண்ணின் ஊர் பெயரைத் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கேலி செய்ததோடு, ஒரு கட்டத்தில் எல்லை மீறி அப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்துகொண்டதாகத் தெரிகிறது.

பாதிக்கப்பட்ட பணிப்பெண் இது குறித்து டெல்லியில் உள்ள தனது உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், இருவரையும் அழைத்து முதற்கட்ட விசாரணை நடத்தினர்.

மீண்டும் பிப்ரவரி 26-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இருவரும் ஆஜராகாமல் தலைமறைவாகினர். இதையடுத்து, அவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த இருவரும் நேற்று மாலை டெல்லியிலிருந்து மீண்டும் இண்டிகோ விமானம் மூலம் சென்னை திரும்பினர். இத்தகவலை முன்கூட்டியே அறிந்த மீனம்பாக்கம் மகளிர் காவல் துறையினர், சென்னை விமான நிலையத்தில் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

விமானத்திலிருந்து இறங்கிய பிரபாகரன் மற்றும் தியாகு ஆகிய இருவரையும் அங்கேயே வைத்து போலீஸார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். மேலும் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் கவுன்சிலரே இது போன்ற செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.