துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பேசியபோது, திமுகவினர் அமலாக்கத்துறைக்கோ அல்லது பிரதமர் மோடிக்கோ பயப்பட மாட்டார்கள் என்றும், “மோடியின் தந்தையே வந்தாலும் திமுக பயப்படாது” என்றும் ஆவேசமாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவிடம் மொத்தமாக விற்றுவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், பாஜக அரசு மக்களிடமிருந்து பறிக்கும் ஆட்சி என்றும், திராவிட மாடல் அரசு மக்களுக்குக் கொடுக்கும் ஆட்சி என்றும் விமர்சித்தார்.
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப்பாதையில் கொண்டு செல்வதாகவும் அவர் சாடினார். மதுரையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உதயநிதியின் இந்த விமர்சனத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகப் பதிலளித்தார்.
ஜனநாயக நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்பதைத் தனது அரசு உறுதி செய்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், உதயநிதி தனது தந்தையைப் பற்றி விமர்சித்ததை ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொள்வதாகக் கூறினார்.
உதயநிதியின் தனிப்பட்ட விமர்சனங்களுக்குப் பிரதமர் மோடி அளித்த இந்தப் பதில் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
