திமுகவில் இணைந்த பிறகு மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தாம் எவ்வித மனப்போராட்டமும் இன்றி மிகுந்த மகிழ்ச்சியுடனேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அனைத்துத் தரப்பு மக்களையும் சமமாக வழிநடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தைத் தனது காரில் வைத்திருப்பதில் எந்தத் தவறுமில்லை என்றும், அவரது கட்டளைப்படியே தானும் தனது ஆதரவாளர்களும் செயல்படப்போவதாகவும் அவர் உறுதியளித்தார்.
மேலும், திமுக நிர்வாகிகள் தன்னை ஒரு சகோதரனைப் போல அன்புடன் வரவேற்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். எதிர்வரும் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்திக்கும் என்று கூறிய ஓபிஎஸ், முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்தத் தொகுதியில் போட்டியிடச் சொல்கிறாரோ அங்கேயே தான் போட்டியிடத் தயார் என்று கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி எத்தனை கூட்டங்களை நடத்தினாலும் தோல்வியையே தழுவும் என்று விமர்சித்த அவர், பெரியார் புகைப்படத்தை அகற்றிய சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றி, திமுகவில் தனக்கு வழங்கப்படும் எந்தப் பொறுப்பையும் செவ்வனே செய்யக் காத்திருப்பதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.
