கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவமாக, காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ-வும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா ஹரிதாஸ் மற்றும் 15 காங்கிரஸ் தொண்டர்கள் மீது திருவனந்தபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கட்சித் தொண்டர் ஒருவரின் வீட்டில் நள்ளிரவில் அரங்கேறிய மோதலும், இரு தரப்பும் மாறி மாறி முன்வைக்கும் புகார்களும் தற்போது பெரும் விவாதப் பொருளாகியுள்ளன.

திருவனந்தபுரம்  பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் சஜாத் என்பவரின் இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பிளாக் பஞ்சாயத்து திட்டக் கூட்டம் தொடர்பான தகராறு ஒன்றைப் பேசுவதற்காக, எம்.எல்.ஏ ரம்யா ஹரிதாஸ் மற்றும் அவரது தனிச் செயலாளர் பாளையம் பிரதீப் ஆகியோர் சஜாத்தின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு இரு தரப்பினருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.

 

இந்த மோதலில் தான் தாக்கப்பட்டுவிட்டதாகவும், இது ஒரு திட்டமிடப்பட்ட “சதி”  என்றும் ரம்யா ஹரிதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “நான் என் ஊழியர்களுடன் சென்றிருந்தேன். இது திட்டமிட்ட சதி. நாங்கள் அமர்ந்தவுடன் சஜித் முத்தம்பலம் உள்ளிட்ட சுமார் 8 பேர் அத்துமீறி உள்ளே நுழைந்து என் கைகளைப் பிடித்து இழுத்தனர். ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த எனது காலில் சஜித் மிதித்தார்; மற்றொருவர் எனது கையைத் திருகினார்” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

சம்பவத்தன்று இரவு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரம்யா ஹரிதாஸ், சிகிச்சைக்குப் பிறகு சனிக்கிழமை காலை வீடு திரும்பினார். காவல்துறையினர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரது வாக்குமூலத்தைக் பதிவு செய்தனர். ரம்யா ஹரிதாஸின் புகாரின் பேரில்,   15 காங்கிரஸ் தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

மறுபுறம், ரம்யா ஹரிதாஸின் குற்றச்சாட்டுகளைக் காங்கிரஸ் தொண்டரான சஜித் முத்தம்பலம் முற்றிலுமாக மறுத்துள்ளார். மாறாக, ரம்யா ஹரிதாஸ்தான் தனது கையைப் பிடித்து இழுத்துச் சண்டைக்கு இழுத்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும், சஜாத்தின் மனைவியான சிமி சஜாத் வெளியிட்ட புகாரில், “நான் என் குழந்தைகளுடன் தனியாக இருந்தபோது, திடீரெனக் கும்பலாக ஓடிவந்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். எம்.எல்.ஏ-வும் அவர்களுடன் இருந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவர் என் மகளின் போனில் ஏதோ ஒன்றைச் படிக்கச் சொல்லி மிரட்டினார்; அதனால் என் குழந்தை மிகவும் பயந்துபோனாள். இதைக் தட்டிக் கேட்ட என்னையும் அவர்கள் தள்ளினர். நாங்கள் காவல்துறையில் முறைப்படி புகார் அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார். சஜாத்தின் புகாரின் பேரில் எம்.எல்.ஏ ரம்யா ஹரிதாஸ் மீதும் காவல்துறை தரப்பில் தனி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சியில், ரம்யா ஹரிதாஸ் வீட்டின் உள்ளே நின்று “என் கையை விடுங்கள்” என்று கூறுவது பதிவாகியுள்ளது. இரு தரப்பினரின் முரணான புகார்களை விசாரித்து வரும் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் விசாரணைக்கு அழைத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.