தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர். பாலு தலைமையிலான திமுக குழுவும், கிரிஷ் சோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் குழுவும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், நேற்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கிரிஷ் சோடங்கர், திமுக தங்களுக்கு 25 இடங்களை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகவும், ஆனால் அது தங்களுக்கு ஏற்புடையது அல்ல என்றும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், சட்டமன்றத்தில் போதிய உறுப்பினர்கள் இருந்தால் தான் தங்களால் மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதால், அதிக இடங்களை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை குறைத்து மதிப்பிட முடியாது என்றும், அக்கட்சி ராகுல் காந்தியையும் காங்கிரஸின் பலத்தையும் அங்கீகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக – காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள இந்த இழுபறி அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
