மத்திய கிழக்கில் ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஓமன் கடற்கரை அருகே நடுக்கடலில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்று மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பலாவ் (Palau) நாட்டு கொடியுடன் சென்ற ‘ஸ்கைலைட்’ (Skylight) என்ற அந்த எண்ணெய் கப்பல், ஓமனின் முசண்டம் தீபகற்பத்திற்கு அருகே சென்றபோது இந்தத் தாக்குதல் நடந்தது.

இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உட்பட மொத்தம் 20 பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களை மேலும் அதிகரித்துள்ளதுடன், கடல் வழிப் போக்குவரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.