மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்திராப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாசு குறித்து சட்டப்பேரவையில் எழுந்த கேள்விக்கு உரிய தகவல்களை வழங்காத அரசு அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்காமல் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி அலட்சியம் காட்டியதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பங்கஜா முண்டே பேரவையில் வேதனையுடன் தெரிவித்தார்.
அதிகாரிகளின் இத்தகைய பொறுப்பற்ற செயலால் மக்கள் பிரதிநிதிகளால் பொதுமக்களுக்குச் சரியான பதிலை அளிக்க முடிவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அமைச்சரின் இந்தப் புகாரை அடுத்து சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகர் திலீப் லாண்டே அதிகாரிகளின் இந்தச் செயல் சட்டமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி தேவேந்திர சிங் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஜனநாயகப் படுகொலை என்று இந்தச் சம்பவத்தை விமர்சித்துள்ள பாஜகவினர் அதிகாரிகள் தங்களது கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரி அனுமதியின்றி மும்பையை விட்டு வெளியேறக் கூடாது என்றும் இலாகா ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
