தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக-வை நோக்கித் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனது எக்ஸ் (X) பக்கத்தில் திமுக-வின் தேர்தல் வியூகங்களைத் தோலுரித்துக் காட்டியுள்ள அவர், திமுக தற்போது ஒருவிதமான தோல்வி பயத்தில் இருப்பதாகக் கிண்டலடித்துள்ளார்.
கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியை மறைக்கவே, ஐம்பது கட்சிகளை வளைத்துப் பிடித்து ஒரு மெகா கூட்டணியை திமுக உருவாக்கி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மெகா கூட்டணி என்பது கொள்கைக்காக உருவானது அல்ல, இது முழுக்க முழுக்க அதிகாரத்தையும் பணத்தையும் நம்பி உருவான ஒரு “கல்லாப்பெட்டி கூட்டணி” என்றும், பலவீனமான வீரன் கூட்டத்திற்குப் பின்னால் ஒளிந்து கொள்வதைப் போல திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவில் நிற்பதாகவும் அவர் விளாசியுள்ளார்.
லெட்டர் பேட் கட்சிகளைத் துணைக்கு வைத்துக் கொண்டு மார்தட்டிக் கொள்ளும் திமுக-வின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு, விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவது உறுதி என நாஞ்சில் சம்பத் தனது பதிவில் ஆவேசமாகக் குறிப்பிட்டுள்ளார்.
