சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சிவகுமார் – அருணா தம்பதியினரின் இரண்டரை வயது பெண் குழந்தை ஹரிவர்த்தினி, முந்திரிப் பருப்பு சாப்பிட்டபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரவு தனது சகோதரியுடன் விளையாடிக்கொண்டே முந்திரி சாப்பிட்ட அந்த சிறுமிக்கு, திடீரென ஒரு பருப்பு தொண்டையில் சிக்கி மூச்சுவிட முடியாமல் போனது. அடுத்த சில விநாடிகளில் குழந்தை மயங்கி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
கே.கே. நகரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் குழந்தையைச் சேர்த்தபோது, அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுமி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். விளையாடிக்கொண்டிருந்த குழந்தை முந்திரி சாப்பிட்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த இச்சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறு குழந்தைகளுக்கு இது போன்ற தின்பண்டங்களைக் கொடுக்கும்போது பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.
