பிரபல டிராவல் இன்ஃப்ளூயன்சர் தாரா வுட்காக் (Tara Woodcox), சமீபத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஓட்டலில் தங்கியிருக்கும்போது மாற்று உள்ளாடை தீர்ந்துவிட்டால், அங்கிருக்கும் காபி மேக்கரை வாஷிங் மெஷினாக மாற்றலாம் என்று அவர் ஒரு ‘பகீர்’ ஐடியாவைக் கொடுத்துள்ளார். காபித் தூள் போடும் இடத்தில் உள்ளாடையை வைத்து, சூடான நீரைப் பாய்ச்சினால் துணி சுத்தமாகிவிடும் என்றும், பிறகு ஹேர் ட்ரையர் மூலம் காய வைத்துக்கொள்ளலாம் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இந்த வீடியோவைக் கண்ட நெட்டிசன்கள், “இனி ஓட்டல் ரூமில் எப்படி நிம்மதியாகக் காபி குடிப்பது?” என்று அருவருப்படைந்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தால் அந்த ஓட்டல் நிர்வாகம் அவர் மீது 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.9 கோடி) நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்ததாக வதந்திகள் பரவின. ஆனால், இது தொடர்பாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ வழக்கும் பதியப்படவில்லை. நெட்டிசன்கள் தன்னை வறுத்தெடுக்கத் தொடங்கியதும், “நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன், நிஜமாகவே நான் அப்படித் துவைக்கவில்லை” என்று தாரா தற்போது பல்டி அடித்துள்ளார். இருப்பினும், வீடியோவில் அவரே அதைச் செய்து காட்டியுள்ளதால் இந்த விவாதம் ஓயவில்லை.
