உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் – ஹாபூர் சாலையில், சிபிஎஸ்இ (CBSE) பொதுத்தேர்வு எழுதிவிட்டுத் திரும்பிய பிஆர் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து மீது மர்ம கும்பல் ஒன்று கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹஜிப்பூர் கிராமம் அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 இளைஞர்கள், பேருந்தை வழிமறித்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் பத்தாம் வகுப்பு மாணவர் ஜதினை குறிவைத்து, நாட்டுத் துப்பாக்கியால் சுட முயன்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாகத் தோட்டா பாயாத நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் துப்பாக்கியின் பின்பகுதியால் ஜதினின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளது.

இதில் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். “அடுத்தத் தேர்வின் போது உன்னைக் கொன்றுவிடுவோம்” என்று மிரட்டிவிட்டுத் தப்பியோடிய சித்தார்த் மற்றும் ஹர்கிதன் உள்ளிட்ட கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.