தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பது உறுதி என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

அந்த கூட்டத்தில் கடம்பூர் ராஜூ பேசியதாவது: “எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராவது நிச்சயிக்கப்பட்ட ஒன்று. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் ஒரு சடங்கு மாத்திரமே. திமுக ஆட்சியில் மக்கள் படும் இன்னல்களைக் கண்டு, மீண்டும் அவர்களுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை. முதல்வர் ஸ்டாலின் பேசும் எதுவும் மக்களுக்குப் புரிவதில்லை. ‘பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்’ என அவர் பேசி வருகிறார். ஆனால், அந்தப் பூஜ்ஜியங்களுக்கு முன்னால் ‘2’ என்ற இலக்கத்தைச் சேர்த்து 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

“திமுக ஒருமுறை ஆட்சிக்கு வந்தாலே மக்களிடம் வெறுப்பைச் சம்பாதித்துவிடும். 100 நாள் வேலைத் திட்டத்தை 125 நாளாக மாற்றுவோம் என்று கூறிவிட்டு, தற்போது 50 நாட்கள் கூட வேலை வழங்காமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆனால் எடப்பாடியார் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்.

தேர்தல் அன்று வாக்குச் சாவடிக்குச் சென்று, இரட்டை இலைச் சின்னத்தைப் பார்த்து ‘டப்பு டப்புனு’ பட்டனை அமுக்குங்கள். தேர்தல் முடிந்து அதிமுக ஆட்சியமைத்த பிறகு, உங்கள் வீடுகளில் ‘பட்டு பட்டுனு’ 10,000 ரூபாய் வந்து விழும்” எனத் தெரிவித்தார்.

மேலும் 2026 தேர்தலில் அதிமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும், திமுகவுக்கு மீண்டும் ஆட்சிக்கு வரும் ‘ராசி’ கிடையாது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.