2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் ஐஜேகே கட்சியிலிருந்து விலகி கடந்த வாரம் அதிமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஐஜேகே கட்சியில் தனது உழைப்பு அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறி விலகிய அவர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்திலேயே அவருக்கு ‘அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளர்’ என்ற மாநில அளவிலான முக்கியப் பொறுப்பை வழங்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாஜக மற்றும் ஐஜேகே ஆகிய கட்சிகளில் ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் கொண்ட லீமா ரோஸுக்கு, அதிமுகவில் இவ்வளவு சீக்கிரம் உயரிய பதவி வழங்கப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது மகன் ஜோ சார்லஸ் புதுச்சேரி அரசியலிலும், மருமகன் ஆதவ் அர்ஜுனா தவெக-விலும் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் நிலையில், லீமா ரோஸின் இந்த அரசியல் நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அவருக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், கோவை மற்றும் லால்குடி பகுதிகளில் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
