மத்தியப் பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மதிய உணவுத் திட்டத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சிகரமான அலட்சியம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்பூர் தொகுதிக்குட்பட்ட ரூய் கிராம அரசுப் பள்ளியில், குழந்தைகள் உணவு சாப்பிட்ட தட்டுகளை இரண்டு நாட்களாகக் கழுவாமல் பள்ளி வளாகத்திலேயே போட்டு வைத்துள்ளனர். அந்த எச்சில் தட்டுகளை நாய்கள் வரிசையாக நின்று நக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள், தகுந்த விளக்கம் அளிக்கத் தவறிய பள்ளித் தலைமை ஆசிரியர் மதன்லால் மற்றும் இரண்டு உதவி ஆசிரியர்களின் ஐந்து நாள் சம்பளத்தை அதிரடியாகப் பறித்து உத்தரவிட்டனர். மேலும், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட மதிய உணவு தயாரிக்கும் சுயஉதவிக் குழுவின் சேவையும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பிஞ்சு குழந்தைகளின் ஆரோக்கியத்தில் விளையாடும் இது போன்ற செயல்கள் நடந்தால் கடும் நடவடிக்கை பாயும் என நிர்வாகம் எச்சரித்துள்ளது.
