கேரள மாநிலம் கண்ணூரில் நேற்று நடைபெற்ற சர்வதேச ஆயுர்வேத மருத்துவ ஆய்வு மாநாட்டை முடித்துவிட்டு, திருவனந்தபுரம் செல்வதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கண்ணூர் ரயில் நிலையம் வந்தடைந்தார். அவர் வந்தே பாரத் ரயிலில் ஏறுவதற்காகச் சென்றபோது, காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் மற்றும் இளைஞர் காங்கிரஸார் 10-க்கும் மேற்பட்டோர் அவருக்கு எதிராக திடீரென கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், அவரை முற்றுகையிட முயன்றதால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் நிலைகுலைந்த அமைச்சர் வீணா ஜார்ஜ், சிகிச்சைக்காக உடனடியாக கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதாவது அமைச்சர் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சுமார் 4 மணி நேரம் அமைச்சர் சிகிச்சை பெற்றார். அவரது கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இரவு 8 மணியளவில் வெளியான மருத்துவ அறிக்கையில், அவருக்கு எம்.ஆர்.ஐ. (MRI) ஸ்கேன் செய்யப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், காயம் ஏற்பட்டதற்கான துல்லியமான விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிடவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக கண்ணூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சரின் புகாரின் பேரில், போராட்டத்திற்குத் தலைமையேற்ற கண்ணூர் மாவட்டத் தலைவர் அதுல், பொருளாளர் அக்சய் மிட்டல், முபாஸ், பிதுல் பாலன், முகமது யாசின் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாக ரயில்வே போலீசாரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “அமைச்சர் வீணா ஜார்ஜ் மீதான இளைஞர் காங்கிரஸாரின் தாக்குதல் அத்துமீறிய செயல். இது கடும் கண்டனத்திற்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கோவிந்தன், மாணவர் காங்கிரஸ் பிரிவினர் திட்டமிட்டே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவத்தால் கண்ணூர் ரயில் நிலையப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
