ரயில் பயணங்களின்போது சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சத்தமாகப் பேசுபவர்கள் மற்றும் பாடல்கள் கேட்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களைப் பயன்படுத்தி வருகின்றனர். குடும்பமாகவும், நண்பர்களுடனும் பயணம் செய்யும்போது சிலர் அதீத சத்தத்துடன் பேசுவது, செல்பேசியில் சத்தமாகப் பாடல்களை அலறவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் மற்ற பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகத் தொடர் புகார்கள் எழுந்து வந்தன.

இத்தகைய இடையூறுகளைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்குப் பல்வேறு விழிப்புணர்வுக் கட்டளைகளை பிறப்பித்துள்ளது. அதன் படி ரயிலில் பாடல்கள் கேட்கும்போதும், வீடியோக்கள் பார்க்கும்போதும் கட்டாயம் ‘ஹெட்செட்’ பயன்படுத்த வேண்டும்.

செல்பேசியில் பேசும்போது மற்றவர்களுக்குக் கேட்காத வண்ணம் மெதுவாகப் பேச வேண்டும். செல்பேசி அழைப்புச் சத்தத்தைக் (Ringtone) குறைந்த அளவில் வைத்திருக்க வேண்டும்.

இந்த விதிகளை மீறுபவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 145-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய இடையூறு செய்த 115 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட பயணிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிச் செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், பயணத்தின்போது யாராவது இடையூறு செய்தால், பயணிகள் உடனடியாக ரயில்வே பணியாளர்களிடமோ அல்லது பாதுகாப்புப் படையினரிடமோ நேரடியாகப் புகாரளிக்கலாம். மேலும், ‘ரெயில் மதத்’ (Rail Madad) செயலி மூலமாகவும் உடனுக்குடன் புகார்களைப் பதிவு செய்யலாம். சக பயணிகளின் சுதந்திரத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,” எனத் தெரிவித்தனர்.

தற்போது இத்தகைய விதிமீறல்களைக் கண்டறிய ரயில்களில் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.