அரசு வேலை என்பது பலரின் கனவு. ஆனால், அந்த வேலையைத் துறந்துவிட்டு ஆட்டோ ஓட்டுவதன் மூலம் அதிக வருமானமும், மனநிறைவும் கிடைப்பதாக” ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பேசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஆட்டோவில் பயணம் செய்யும் பெண் பயணி ஒருவரிடம் அந்த ஓட்டுநர் தனது கதையைப் பகிர்ந்து கொள்கிறார். தான் முன்பு பார்த்து வந்த அரசு வேலையை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டத் தொடங்கியதாக அவர் கூறுகிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், “நல்ல வருமானம் இல்லையா அல்லது வேலை பிடிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஓட்டுநர், “வேலையில் வருமானமும் இருக்க வேண்டும், மனதிற்குப் பிடித்தும் இருக்க வேண்டும். அந்த அரசு வேலையில் எனக்கு 1500 ரூபாய் மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்த ஆட்டோவை ஓட்டி வெறும் 5 நாட்களில் என்னால் 1500 ரூபாய் சம்பாதிக்க முடிகிறது” என்று கூறுகிறார். மேலும், ஆட்டோ ஓட்டி ஈட்டிய வருமானத்தைக் கொண்டே தற்போது 13 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய டிராக்டர் ஒன்றையும் வாங்கியுள்ளதாகத் தெரிவித்து ஆச்சரியப்படுத்துகிறார்.

தன் தற்போதைய வாழ்க்கை குறித்து அவர் பேசுகையில், “நான் இந்த வாழ்க்கையில் மிகவும் திருப்தியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறேன். இங்கு நான் யாருக்கும் அடிமையில்லை; நானே எனக்கு முதலாளி. எப்போது வேலைக்கு வர வேண்டும், எப்போது வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது எனது விருப்பம். சில நேரங்களில் 10 மணிநேரம் உழைப்பேன், சில நேரங்களில் 15 மணிநேரம் வேலை செய்வேன். யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ishita Khandelwal (@mohtarma.records)

இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். கமெண்ட் பிரிவில் சிலர், “எந்த அரசு வேலையில் 1500 ரூபாய் சம்பளம் தருகிறார்கள்? ஒருவேளை அவர் 15,000 என்று சொல்ல வந்திருப்பாரோ?” எனச் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இருப்பினும், பெரும்பாலானோர் அவரது தன்னம்பிக்கையையும், உழைப்பையும் பாராட்டி வருகின்றனர். “செய்யும் வேலையில் மகிழ்ச்சியும் திருப்தியும் இருப்பதே வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றி” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.