அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு, தனது 15 மாத பெண் குழந்தையைத் தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்த வழக்கில், 43 வயதான பிரெஷியஸ் பிளாண்ட் என்ற பெண்ணைக் குற்றவாளி அல்ல என்று மியாமி-டேட் கவுண்டி நீதிமன்றம் அதிரடியாக விடுதலை செய்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட கடுமையான மனநோய் காரணமாக, அவர் முற்றிலும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த செயலைச் செய்துள்ளார் என்ற பிரதிவாதி தரப்பு வாதத்தை நீதிபதி மிகுவல் டி லா ஓ ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது தன் கணவர் மற்றும் 16 வயது மூத்த மகளைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற வழக்குகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதில் காயமடைந்த கணவனும், மகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்ததோடு, வீட்டிற்குள் இருந்த மற்ற 4 குழந்தைகளும் எவ்வித காயமுமின்றி தப்பினர்.

 

விசாரணையில், “இயேசு கிறிஸ்து வரப்போகிறார், கொரோனா வைரஸ் நம் அனைவரையும் கொன்றுவிடும்” என்று நம்பிய பிரெஷியஸ், தனது குடும்பத்தினருக்கு ஞானஸ்நானம் செய்வதாக நினைத்து குழந்தையைக் குளியல் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்றதும், பின்னர் கணவர், மகளைக் குத்திவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. கொரோனா வைரஸ் அவரது மூளையைப் பாதித்து கடுமையான மனநலக் கோளாறைத் தூண்டியது என்று மருத்துவ நிபுணர்கள் அளித்த ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்த விசித்திரமான வாதத்தை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்த்த போதிலும், நீதிமன்றம் அதை நிராகரித்து பிரெஷியஸை விடுவித்தது. அமெரிக்க சட்ட வரலாற்றிலேயே, கொரோனாவால் ஏற்பட்ட மனநோய் பாதிப்பைக் காரணமாகக் காட்டி, கொலை வழக்கில் ஒருவருக்கு ‘மனநல பாதிப்பு’ அடிப்படையில் விடுதலை வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.