தலைநகர் டெல்லியின் ரோகிணி பகுதியில், குப்பை வியாபாரி ஒருவர் காட்டிய அபாரமான நேர்மை ஒட்டுமொத்த தேசத்தையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோகிணி செக்டார் 26-ஐச் சேர்ந்த சாந்தினி குமாரி என்பவர், தனது பழைய இரும்பு அலமாரியை ஸ்கிராப் வியாபாரி அஷ்ரஃபிடம் விற்றுள்ளார்.
ஆனால், அந்த அலமாரியின் ரகசிய லாக்கரில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருப்பதை அவர் கவனிக்கத் தவறிவிட்டார். மறுநாள் அலமாரியைத் திறந்த அஷ்ரஃப், உள்ளே இருந்த நகைகளைக் கண்டு ஒரு நிமிடம் திகைத்தாலும், பேராசைக்கு இடம் கொடுக்காமல் உடனடியாக அதன் உரிமையாளரைத் தொடர்பு கொண்டார். தனது நண்பர்களுடன் சென்று அந்த நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த அஷ்ரஃப், அதற்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட 3,000 ரூபாயைக் கூட வாங்க மறுத்து, “மனிதாபிமான அடிப்படையில் இது எனது கடமை” என்று கூறி வியக்க வைத்துள்ளார்.
சமூக வலைதளங்களில் சமீபத்தில் பார்த்த ஒரு நேர்மையான சம்பவமே தன்னை இப்படிச் செய்யத் தூண்டியதாகக் கூறிய அஷ்ரஃபின் இந்த செயல், “உண்மையும் நேர்மையும் இன்னும் சாகவில்லை” என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.
