தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை எதிர்பார்ப்பதோடு, ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை அவ்வப்போது முன்வைத்து வருகிறது.
சமீபத்தில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி இந்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. “நாங்கள் அரசியல் கட்சி நடத்துகிறோம், தொண்டு நிறுவனம் அல்ல; ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பம் எல்லா கட்சிக்கும் இருக்கும்” என்று அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு, தவெக தரப்பு காங்கிரஸுடன் இணையத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அரசியலில் யாருடனும் பேச்சுவார்த்தை என்பது நிக்காது என்றும், எதிரிகளாக இருந்தாலும் சந்திக்கும்போது பேசிக்கொள்வது இயல்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், காங்கிரஸின் இந்த மாற்று நிலைப்பாடுகள் குறித்த பேச்சுக்கள் கூட்டணியில் ஒருவிதமான பரபரப்பை உண்டாக்கியுள்ளன.
