தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 35 தொகுதிகளைக் குறிவைத்து களம் இறங்கியுள்ளது. இதற்காக பாஜக தரப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, தங்களுக்கு விருப்பமான 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கியுள்ளனர்.

கடந்த தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக, இந்த முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்பது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி போன்ற முக்கியத் தொகுதிகளையும், கோவையின் வலுவான தொகுதிகளையும் பாஜக எதிர்பார்ப்பதால், எடப்பாடி பழனிசாமி இதற்குச் சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மறுபுறம், திமுக மார்ச் 1-ஆம் தேதிக்குள் தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டு திருச்சியில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளது. அதிமுக தரப்பிலும் தற்போது முதற்கட்ட ஆலோசனைகள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இன்னும் சில நாட்களில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வரவுள்ள நிலையில், பாஜகவுடனான தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கினால் அது அதிமுகவுக்குப் பின்னடைவாக அமையலாம் எனக் கருதப்படுவதால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.