2026 டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் திடீரென தொடரில் இருந்து விலகி சொந்த ஊரான அலிகார் திரும்பியுள்ளார். அவரது தந்தை கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த அவசரச் சூழலால், பிப்ரவரி 26-ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முக்கியமான போட்டியில் ரிங்கு சிங் பங்கேற்பது சந்தேகம் தான்.
இன்று நடைபெற்ற பயிற்சி முகாமிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்த உலகக்கோப்பையில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்து ரிங்கு சற்று தடுமாறி வந்தாலும், இக்கட்டான நேரத்தில் ஆட்டத்தை முடித்துக் கொடுக்கும் அவரது ‘பினிஷர்’ திறமை இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.
தற்போது அவர் இல்லாதது அணிக்கு பின்னடைவாகக் கருதப்படும் நிலையில், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
