மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது வங்கி ஊழியரான அயாஷ் விஸ்வநாத் அமீன், வெறிநாய்க்கடி நோய் வந்துவிடுமோ என்ற அதீத பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை தெருநாய் ஒன்று கடித்த நிலையில், அதற்காக அவர் முறையான தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும், ரேபிஸ் நோய்க்கான அறிகுறிகள் தனக்குத் தென்படுவதாக அவர் நம்பியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் மற்றும் அச்சம் காரணமாக, கல்யான் பகுதியில் உள்ள தனது வீட்டில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், தடுப்பூசி போட்ட பின்னரும் தனக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தான் கருதுவதாகவும், அந்த பயத்தினாலேயே இந்த முடிவை எடுப்பதாகவும் அவர் உருக்கமாக எழுதியுள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ ரீதியாகத் தடுப்பூசி போடப்பட்ட பிறகும், வெறும் மனப்பயம் காரணமாக ஒரு வாலிபர் உயிரை மாய்த்துக் கொண்ட நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
