தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் நாளை நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கவும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையை நாளை மாலை 6 மணி வரை மூடுமாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் வருகையையொட்டி வேலூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ள நிலையில், காவல்துறையினர் அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.