தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தில், விளையாடிக்கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தையை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் திடீரெனக் கடத்திச் சென்றனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். புகாரைப் பெற்ற அடுத்த நிமிடமே திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கடத்தப்பட்ட 20 நிமிடங்களிலேயே, குழந்தையுடன் தப்பிச் செல்ல முயன்ற சென்னை தம்பதியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். குழந்தையைப் பத்திரமாக மீட்ட போலீசார், அந்தத் தம்பதியைக் கைது செய்து, அவர்கள் எதற்காகக் குழந்தையைக் கடத்தினார்கள் என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் இந்த அதிரடி மற்றும் விரைவான செயல்பாடு பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.