சென்னை சாலிகிராமம் பகுதியில், பெற்ற மகளுக்குத் தூக்க மாத்திரை கொடுத்து தனது கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாயின் கொடூரச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் 20 வயது மகளுடன் வசித்து வருகிறார். பணியின் காரணமாக வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்லும் காவலாளி, மற்ற நாட்களில் பணியிடத்திலேயே தங்கிவிடுவார்.

இந்தச் சூழலில், அவரது மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவர் இல்லாத நேரங்களில் அந்த நபர் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். தாயின் இந்த தவறான நடத்தை குறித்து மகள் அறிந்திருந்த போதிலும், பயம் காரணமாக யாரிடமும் பேசாமல் தவிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 3-ஆம் தேதி, காவலாளியின் மகள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தாய் தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். மாத்திரையின் வீரியத்தால் மகள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த போது, தாய் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்ததோடு மட்டுமன்றி, அந்த நபர் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணையும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மயக்கம் தெளிந்து எழுந்த இளம்பெண், தான் வன்கொடுமைக்கு ஆளானதை உணர்ந்து அதிர்ச்சியுடன் தாயிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்தத் தாய், “எல்லாம் சரியாகிவிடும்” எனக் கூறி மழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, கடந்த 23-ஆம் தேதி மீண்டும் மகளுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், தாய் மீண்டும் அவருக்குத் தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த கள்ளக்காதலன், இளம்பெண்ணிடம் அத்துமீற முயன்றபோது, உணர்வு பெற்று எழுந்த மகள் அலறியுள்ளார். உடனே ஆத்திரமடைந்த தாய், மகளை அறையில் வைத்துப் பூட்டியதுடன், இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.

தாயின் பிடியில் இருந்து தப்பிய இளம்பெண், திருவண்ணாமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைச் சொல்லி அழுதுள்ளார். அவருக்குத் தொடர் வயிற்று வலி இருந்ததால், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற மகளையே கள்ளக்காதலனுக்கு இரையாக்கிய தாயின் இச்செயல் சென்னையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.