ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா செல்லவுள்ள செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

மேலும், மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகளில் இந்த அரசு ‘இன்ஆக்டிவ்’ (Inactive) ஆக இருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்நிலையில், ஸ்டாலினின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) பக்கத்தில் மிகக் காரசாரமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

​அந்தப் பதிவில் திமுகவைக் கடுமையாக விமர்சித்துள்ள தவெக, “மேகதாது அணை விவகாரம் 2026 மே 10-ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல திமுக தலைமை உளறி வருகிறது. இதன் மூலம் கடந்த காலத்தில் தாங்கள் தூங்கிக் கொண்டிருந்ததை திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலமாகக் கொடுக்கிறதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், “தமிழக மக்களால் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பிறகும், தாங்களே இன்னும் முதலமைச்சர் என்பது போலப் பேசுவது யதார்த்த உலகில் இருந்து முற்றிலும் விலகி இருப்பதைக் காட்டுகிறது” என்றும் சாடியுள்ளது.  தொடர்ந்து பேசிய தவெக ஐடி விங், “திமுக ஆட்சியில் இருந்தபோது சரியாகச் செயல்பட்டிருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை ‘Inactive Mode’-க்குத் தள்ளியிருக்க மாட்டார்கள்.

யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையிலும், வயிற்றெரிச்சலிலும், பதவி வெறியிலும் திமுக பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், திமுகதான் இன்னும் அதை உணராமல் இருக்கிறது” என்று நேரடியாகவே தாக்கியுள்ளது.

​இறுதியாக, “மேகதாது அணை விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த எந்தவொரு விஷயத்திலும், தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன்கள் பாதிக்கப்படத் தமிழக வெற்றிக் கழக அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது” என்று மிக உறுதியாகத் தெரிவித்துள்ளது. எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் தவெக ஐடி விங்கின் இந்த அதிரடிப் பதிவு, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.