உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் கைரானா பகுதியில் மருமகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று தோல்வியடைந்த மாமனார், அவரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 11ம் தேதி மஸ்குரா என்ற பெண் தனது அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரது மாமனார் அப்பாஸ் இது தற்கொலை என்று கூறி நாடகமாடினார். ஆனால் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், மருமகளின் மீது தவறான எண்ணம் கொண்ட அப்பாஸ், அவரைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் திட்டமிட்டது தெரியவந்தது.
மருமகளின் பழைய காதல் விவகாரத்தைத் தெரிந்துகொண்டு, அவரது கணவர் இல்லாத நேரத்தில் காதலனை வீட்டுக்கு அழைக்க அனுமதி கொடுத்து நம்பிக்கையைச் சம்பாதித்த அப்பாஸ், இறுதியில் தனது இழிவான ஆசைக்கு இணங்காததால் மருமகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலையை மறைக்கத் தனது மகன் சல்மானுடன் இணைந்து தற்கொலை போலச் சித்தரித்த அப்பாஸ், உட்புறமாகப் பூட்டியிருந்த கதவைத் தந்திரமாகத் திறந்து உள்ளே சென்று குற்றத்தைச் செய்துள்ளார். உடற்கூறு ஆய்வு செய்யவிடாமல் தடுத்தது மற்றும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறியதால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அறிவியல் ரீதியான விசாரணையை மேற்கொண்டனர்.
இதில் அப்பாஸின் சதித்திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து, கொலையாளி அப்பாஸ் மற்றும் ஆதாரங்களை மறைக்க உதவிய அவரது மகன் சல்மான் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். உறவுகளுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அரங்கேறிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
