பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவி வரும் உட்கட்சிப் பூசல் தற்போது நீதிமன்றப் படிகளில் ஏறியுள்ளது. பாமகவின் பெயரையும், அதன் அதிகாரப்பூர்வ ‘மாம்பழம்’ சின்னத்தையும் அன்புமணி ராமதாஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது எனத் தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கட்சியின் அடையாளத்தை யார் பயன்படுத்துவது என்ற இந்த அதிகாரப் போட்டி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனுவை இன்று (பிப்ரவரி 20) விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ராமதாஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், கட்சிப் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான விவகாரங்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால், இது குறித்து தேர்தல் ஆணையத்தையே அணுகுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு அன்புமணி ராமதாஸ் தரப்பிற்குச் சாதகமாக அமைந்துள்ள நிலையில், பாமகவின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
