பஞ்சாப் மாநிலம் தரண் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாயத்துத் தலைவர் ஹர்பிந்தர் சிங் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ததியான் மேத்தா கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரான இவர், பஞ்சாப் மாநில அமைச்சர் லால்ஜித் சிங் புல்லாருக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். திருமண மண்டபத்தில் உறவினர்களுடன் அமர்ந்திருந்தபோது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், மிக நெருக்கமான தொலைவில் இருந்து துப்பாக்கியால் சுட்டதில் ஹர்பிந்தர் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தடுக்க முயன்ற அவரது உறவினர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொலைச் சம்பவத்தில் மர்ம நபர்கள் ஏ.கே.47 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தியதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திலிருந்து 2 வெற்றுத் தோட்டாக்களைக் கைப்பற்றியுள்ள போலீசார், இது பழைய முன்விரோதம் காரணமாக நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் அமிர்தசரஸில் உள்ள வால்டோஹா கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு ஆம் ஆத்மி பஞ்சாயத்துத் தலைவர் ஜார்மால் சிங் இதேபோல் திருமண விழாவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், சில வார இடைவெளியில் மீண்டும் ஒரு மக்கள் பிரதிநிதி கொல்லப்பட்டிருப்பது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
