அரியானா மாநில நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் ஊழியர் நல அமைப்பால் கட்டப்பட்ட உயர் ரக வீடுகளை, அதன் நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் அவரது கீழ் பணிபுரியும் அதிகாரிக்கு முன்னுரிமை அடிப்படையில் தன்னிச்சையாக ஒதுக்கியதை இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

தகுதியற்ற முறையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தினேஷ் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவைத் தள்ளுபடி செய்தது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குச் சலுகை வழங்குவதும், சுயநலம் பாராட்டுவதும் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே விரோதமானது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கடுமையாகச் சாடியுள்ளனர்.

இந்த முறையற்ற ஒதுக்கீடு தொடர்பாக நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம், அந்த வீடுகளைப் பெற்ற நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் அவரது துணை அதிகாரி ஆகியோருக்கும் தனித்தனியாக அபராதம் விதித்துள்ளது.

மேலும், சட்டவிரோதமாகக் குடியிருக்கும் வீடுகளில் இருந்து ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் வெளியேற வேண்டும் என்றும், அவர்கள் செலுத்திய தொகையை எவ்வித வட்டியும் இன்றித் திருப்பித் தர வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அரசு சார்ந்த அமைப்புகள் வீடுகளை ஒதுக்கும்போது தகுதி மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எவ்வித தனிப்பட்ட முன்னுரிமையும் வழங்கக்கூடாது என்றும் இந்தத் தீர்ப்பின் மூலம் நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர்.