திமுக அரசுக்கு எதிராகத் தொடர்ச்சியாகச் சீறி வந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விவகாரம், இப்போது கூட்டணியையே பதம் பார்க்கும் நிலைக்குச் சென்றிருக்கிறது. “எங்களுக்கு எதிராகப் பேசுபவர்களை அடக்கினால்தான் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கே வருவோம்” என திமுக தலைமை கறார் காட்டியதாகக் கூறப்படுகிறது. மாணிக்கம் தாகூரின் அதிரடிப் பேச்சுகளைக் காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த செல்வப்பெருந்தகை, டெல்லிக்கு விரைந்து காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் புகார் அளித்துள்ளார். மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

​செல்வப்பெருந்தகையின் புகாரை அடுத்து, காங்கிரஸ் மேலிடம் இறுதியாக மௌனம் கலைத்துள்ளது. “இனிமேல் திமுகவுக்கு எதிராக இப்படியெல்லாம் பேச வேண்டாம்” என மாணிக்கம் தாகூருக்குக் காங்கிரஸ் தலைமை கடும் டோஸ் கொடுத்துக் கண்டித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜ்யசபா சீட் பங்கீடு மற்றும் வரும் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் மாணிக்கம் தாகூருக்கு விழுந்த இந்த ‘செக்’ தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.