தமிழகத்தில் காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, மொத்தமுள்ள 4 இடங்களுக்குப் பெரிய போட்டியே நிலவி வருகிறது. திருச்சி சிவாவிற்கு ஒரு சீட் உறுதியாகிவிட்ட நிலையில், எஞ்சிய 3 இடங்களுக்கு காங்கிரஸ் மற்றும் விசிக காய் நகர்த்தி வருகின்றன.

இது ஒருபுறமிருக்க, கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இருப்பதாகக் கூறப்படும் தேமுதிக-வும், டாக்டர் ராமதாஸும் தலா ஒரு சீட் கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், யாருக்குக் கொடுப்பது, யாரைச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் திமுக தலைமை திக்குமுக்காடிப் போயுள்ளது.

​அதிமுக கோட்டையிலும் நிலைமை சற்றும் குறையவில்லை. அக்கட்சிக்குக் கிடைக்கப்போகும் 2 இடங்களில் ஒன்று ஏற்கனவே அன்புமணி ராமதாஸிற்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது. மீதமுள்ள அந்த ஒரே ஒரு சீட்டுக்காக ஜி.கே.வாசன் மற்றும் தம்பிதுரை இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், “அதிமுக நிர்வாகிகள் எங்களுக்கும் ஒரு சீட் வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.