சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்.
சேலத்தில் விஜய் ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டிய அவர், மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற தெளிவான புரிதல் இன்றி, தேர்தல் அறிக்கையைப் பார்த்து முடிவெடுப்பேன் எனக் கூறுவது நகைப்புக்குரியது என்றார். ஒரு நோயாளிக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதைப் புத்தகத்தைப் பார்த்துச் சொல்வேன் என்று ஒரு மருத்துவர் கூறினால், அந்த மருத்துவமனையை விட்டு மக்கள் எப்படி ஓடிவிடுவார்களோ, அதேபோன்ற நிலைதான் விஜய்யின் அரசியல் நிலைப்பாடும் என அவர் ஒப்பிட்டுப் பேசினார்.
தொடர்ந்து த.வெ.க. தொண்டர்களுக்கும், அதன் தலைவருக்கும் நேரடி சவால் விடுத்த திவ்யா சத்யராஜ், அடுத்த மூன்று நாட்களுக்குள் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அனுப்புமாறு தொண்டர்களுக்குக் கூறினார்.
மேலும், விஜய்யை நோக்கி, “தமது கட்சியில் உள்ள குறைந்தது 10 தொண்டர்களின் பெயர்களையாவது குறிப்பேட்டைப் பார்க்காமல் உங்களால் சொல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். ஒரு கட்சியின் தலைவருக்குத் தனது தொண்டர்களின் பெயர்கள் தெரிந்திருக்க வேண்டியது அடிப்படைத் தகுதி என்றும், மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவராக அவர் செயல்படவில்லை என்றும் அவர் தனது உரையில் சாடினார்.
