டி20 உலகக் கோப்பைத் தொடரின் வாழ்வா-சாவா ஆட்டத்தில் நமீபியாவைச் சந்தித்த பாகிஸ்தான் அணி, களத்தில் ரன்களைக் குவித்தாலும், பெவிலியனில் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இடையே ஏற்பட்ட மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 61 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணிக்கு, நமீபியாவுடனான நேற்றைய போட்டி மிக முக்கியமானது. இதில் தோற்றால் தொடரை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் என்பதால் மிகுந்த நெருக்கடியுடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. டாஸ் வென்ற கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
போட்டியின் போது ஒரு கட்டத்தில் கேப்டன் சல்மான் அலி ஆகா ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அப்போது அவரிடம் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் ஏதோ சொல்ல முற்பட, இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கேப்டன் சல்மான், பயிற்சியாளர் முன்னிலையிலேயே தண்ணீர் பாட்டிலை கீழே வீசி எறிந்தார்.
இச்சம்பவத்தைக் கண்டு மைக் ஹெசன் அதிர்ச்சியடைய, அருகில் இருந்த முன்னாள் கேப்டன் பாபர் அசாம் செய்வது அறியாது திகைத்து நின்றார். இந்த மோதல் காட்சிகள் டிவி கேமராக்களில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அணி நிர்வாகத்தின் முடிவுகளால் நட்சத்திர வீரர் பாபர் அசாம் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. தொடக்க வீரராகப் களம் இறங்காமல், நான்காவது வரிசைக்குத் தள்ளப்பட்ட அவருக்கு, நேற்றைய போட்டியில் அதிலும் வாய்ப்பு வழங்கப்படாமல் அவருக்கு முன்னதாகவே கவாஜா நஃபே மற்றும் ஷதாப் கான் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர்.
அதேபோல், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்களில் 31 ரன்களை வாரி வழங்கிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் இன்று மைதானத்தில் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் சுமந்தது குறிப்பிடத்தக்கது.
இத்தனை குழப்பங்களுக்கு மத்தியிலும், தொடக்க வீரர் சாகிப்ஜாதா ஃபர்ஹான் அபாரமாக விளையாடி தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவு செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100 ரன்களை அவர் குவிக்க, பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்தது. ஷதாப் கான் அவருக்கு உறுதுணையாக ஆடி 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
Pakistan Captain Salman Agha & Coach Mike Hesson heated arguement was caught on live tv !! pic.twitter.com/Xwz0NDOMQg
— Gss🇮🇳 (@Gss_Views) February 18, 2026
பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வலுவான நிலையில் இருந்தாலும், பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இடையிலான இந்த மோதல் அந்த அணியின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
