ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் தங்குவதற்கு இடமின்றி சாலைகளில் அலையவிடப்பட்டதாகவும், தற்போதைய நிர்வாகத்தின் கீழ் வீரர்களால் பணியாற்ற முடியாது என்றும் அந்த அணியின் கேப்டன் அம்மாத் ஷகீல் பட் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹாக்கி தொடரில் பங்கேற்றுவிட்டு நேற்று லாகூர் திரும்பிய பாகிஸ்தான் அணிக்கு கசப்பான அனுபவங்களே மிஞ்சின. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் அம்மாத் ஷகீல் பட் கூறியதாவது:

“தற்போதைய ஹாக்கி சம்மேளன நிர்வாகத்துடன் எங்களால் இணைந்து செயல்பட முடியாது. ஒரு சர்வதேசப் போட்டிக்குச் செல்வதற்கு முன்பாக, வீரர்கள் சமையலறையைச் சுத்தம் செய்துவிட்டு, பாத்திரங்களைக் கழுவிவிட்டுச் சென்றால் என்ன மாதிரியான வெற்றியை எதிர்பார்க்க முடியும்?” என ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினார்.

ஆஸ்திரேலியா சென்றடைந்த பாகிஸ்தான் வீரர்கள் சிட்னி விமான நிலையத்திலேயே சுமார் 12 முதல் 13 மணி நேரம் தவிக்கவிடப்பட்டுள்ளனர். அங்கிருந்து கான்பெர்ரா சென்றடைந்த போது, தங்குவதற்கு முன்பதிவு செய்யப்பட்ட ஹோட்டல் கட்டணங்கள் செலுத்தப்படாததால், வீரர்கள் தங்களது உடமைகளுடன் சாலைகளில் அலைய நேரிட்டுள்ளது.

அதன் பிறகு, 13 நாட்கள் பயணத்திற்காக வெறும் 10 நாட்களுக்கு மட்டும் ஒரு தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதிலும் பாதி நாட்களுக்குப் பிறகு மிகவும் மலிவான தங்குமிடங்களுக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இந்த மன உளைச்சலால் ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனிக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது.

https://twitter.com/BhairavForce/status/2024019608806785418?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2024019608806785418%7Ctwgr%5E439751d4c0c0373782437783c492070eeb09a256%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fd-268244646174624685.ampproject.net%2F2601162341000%2Fframe.html

வீரர்களின் ஹோட்டல் செலவுகளுக்காக 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை (சுமார் 10 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய்) ஏற்கனவே விடுவித்துவிட்டதாக பாகிஸ்தான் விளையாட்டு வாரியம் (PSB) தெரிவித்துள்ளது. அப்படியிருக்கையில், வீரர்களுக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ஊடகங்களிடம் பேசினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வீரர்கள் மிரட்டப்பட்டதாகக் கூறிய கேப்டன், “எங்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால், எங்களுக்கு ஒரு வெளிநாட்டுப் பயிற்சியாளரும், நேர்மையான நிர்வாகமும் தேவை. ஆஸ்திரேலியாவில் நாங்கள் அனுபவித்த கொடுமைகளுக்காகவே நான் இப்போது பேசுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.