இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 10-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் ஆட்டத்தில், நமீபியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
கொழும்புவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய பர்ஹான், நமீபியாவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அதிரடியாக விளையாடிய அவர் 58 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி, பாகிஸ்தானின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், நமீபியா 17.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது
பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உஸ்மான் தாரீக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 102 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
