டி20 உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் அணி நமீபியாவை எதிர்கொள்கிறது. சூப்பர் 8 சுற்றை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள பாகிஸ்தான் அணியில், இன்றைய போட்டிக்காக இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நமீபியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் பாகிஸ்தான் உள்ளது. இதற்காக அணியின் விளையாடும் லெவனில் (Playing XI) அதிரடி மாற்றங்களை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு பதிலாக சல்மான் மிர்சா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல், அப்ராருக்குப் பதிலாக கவாஜா நஃபே களம் இறக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முதன்மை பந்துவீச்சாளரான ஷாஹீன் ஷா அப்ரிடி இன்றைய போட்டியில் ஆடும் லெவனில் இடம் பெறாதது மட்டுமல்லாமல், மைதானத்தில் சக வீரர்களுக்குத் தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு வருவதும், பேட்ஸ்மேன்களுக்குக் கையுறைகளை (Gloves) மாற்றிக் கொடுப்பதுமான பணிகளைச் செய்து வருகிறார்.
அணியின் முக்கிய வீரரான ஷாஹீன் அப்ரிடி இத்தகைய பணிகளைச் செய்வது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அணியில் மற்ற வீரர்கள் இருந்தும், ஷாஹீனை இத்தகைய பணிகளுக்குப் பயன்படுத்தியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முக்கியமான சூப்பர் 8 சுற்றுகள் தொடங்குவதற்கு முன்னதாக, ஷாஹீன் அப்ரிடிக்கு பணிச்சுமை காரணமாக நிர்வாகம் ஓய்வு அளித்திருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இருப்பினும், சமீபத்திய போட்டிகளில் அவர் எதிர்பார்த்த அளவிற்குப் பந்துவீசாதது மேலாண்மைக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய போட்டியில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் பாகிஸ்தான் அணிக்குச் சாதகமாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
