அதிமுகவின் மூத்த அரசியல் சாணக்கியரும், ஓ.பன்னீர்செல்வத்தின் நம்பிக்கைக்குரிய ஆலோசகருமான பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழக அரசியலில் ஒரு புதிய அதிரடியைக் கிளப்பியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் அணியின் மூளையாகச் செயல்பட்டு வந்த அவர், தற்போது திடீரென ‘எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியைப் பதிவு செய்துள்ளார். ஓபிஎஸ் தரப்புடன் இணைந்து பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனிக்கட்சி தொடங்கி அவர் எடுத்துள்ள இந்த முடிவு தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

​இந்த புதிய கட்சியின் தொடக்க விழா மற்றும் கொடி அறிமுக நிகழ்வு நாளை (பிப்.19) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடியை பண்ருட்டி ராமச்சந்திரன் முறைப்படி அறிமுகம் செய்து வைக்கிறார். ஓபிஎஸ் தரப்பிற்குப் பின்னடைவா அல்லது இது ஒரு புதிய அரசியல் வியூகமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பண்ருட்டியாரின் இந்த ‘மாஸ்டர் பிளான்’ அதிமுகவின் வாக்கு வங்கியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசியல் விமர்சகர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.