திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியல் களம் குறித்து தனது பாணியில் அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தைப் பிரம்மாண்டமான மாநாட்டோடு தொடங்கிவிட்டு, தற்போது வெறும் நிர்வாகிகள் சந்திப்பு எனத் தனது செயல்பாடுகளைச் சுருக்கிக் கொண்டது குறித்த கேள்விக்குச் சீமான் மிகச் சுருக்கமாகவும், அதே சமயம் மர்மமாகவும் பதிலளித்தார். விஜய்யின் இந்தத் திடீர் ‘சைலண்ட்’ மோட் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

​செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த சீமான், “அவ்வளவு பெரிய பிரம்மாண்டத்தோடு அரசியலைத் தொடங்கிவிட்டு, இப்போது ஏன் இப்படிச் சுருங்கிப் போனார் என்பதை அவரிடம்தான் (விஜய்) நீங்கள் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்து நழுவினார். விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பொதுவாக வெளிப்படையாகப் பேசும் சீமான், இம்முறை மிகவும் கவனமாகப் பதிலளித்திருப்பது பலரது புருவங்களை உயரச் செய்துள்ளது. இது தவெக-வின் உத்தியா அல்லது பின்னடைவா என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது.