திருப்பூர் மாவட்டம், கோவிந்தபுரம் ஊராட்சிக்குட்பட்ட மாந்தியாபுரம் பகுதியில் வசித்து வரும் முதியவர் கோவிந்தசாமி மற்றும் அவரது மனைவி பாலாமணி ஆகியோரை இலக்காகக் கொண்டு இந்தத் துணிகரக் கொள்ளை நடந்துள்ளது. நேற்று நள்ளிரவில் இவர்களது வீட்டின் கதவைத் தட்டிய மர்ம நபர்கள் சிலர், குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் கோவிந்தசாமி கதவைத் திறந்தபோது, முகமூடி அணிந்திருந்த அந்தக் கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்தது.
எதிர்ப்புத் தெரிவித்த முதிய தம்பதியை அந்தக் கும்பல் கொடூரமாகத் தாக்கிவிட்டு, பாலாமணி அணிந்திருந்த தாலிச் சங்கிலி உட்பட 7 பவுன் தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
