உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயின்று வந்த ஆறு வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கக்ராலா பகுதியில் உள்ள அந்தப் பள்ளிக்கு வழக்கம்போல் காலையில் சென்ற தப்சி என்ற அந்தச் சிறுமி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

 

சிறுமியின் கையில் இருந்த வளையலில் உள்ள மணி அவரது மூச்சுக்குழாயில் சிக்கியதே உயிரிழப்புக்குக் காரணம் எனப் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனது மகள் காலையில் பள்ளிக்குச் செல்லும்போது முழு ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும் பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என்றும் சிறுமியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து சிறுமியின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.