2026-ஆம் ஆண்டின் முதல் வானியல் நிகழ்வாக பிப்ரவரி 17-ம் தேதி தோன்றும் வளைய சூரிய கிரகணத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் ஒரு சிறப்பு அனிமேஷன் அம்சத்தை வெளியிட்டுள்ளது. இந்த கிரகணத்தின் போது நிலவு சூரியனின் மையப்பகுதியை மறைத்து, அதன் விளிம்பை மட்டும் பிரகாசமாகத் தெரியச் செய்வதால் இது ‘நெருப்பு வளையம்’என்று அழைக்கப்படுகிறது.

இந்த அபூர்வ நிகழ்வைக் கொண்டாடும் விதமாக, கூகுள் தேடுபொறியில் அல்லது என்று தேடுபவர்களுக்கு, திரையின் குறுக்கே நிலவு சூரியனை மெதுவாகக் கடந்து செல்லும் ஒரு அழகான அனிமேஷன் தோன்றுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அனிமேஷன் உலகெங்கிலும் உள்ள இணைய பயனர்களுக்குக் கிடைத்தாலும், இந்தச் சூரிய கிரகணத்தை இந்தியாவில் நேரடியாகப் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நேரப்படி பிப்ரவரி 17-ம் தேதி பிற்பகல் 3:26 மணிக்குத் தொடங்கி இரவு 7:57 மணி வரை இந்த நிகழ்வு நீடிக்கிறது.

இது முக்கியமாக அண்டார்டிகா, ஆப்பிரிக்காவின் தென் பகுதிகள் மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே தென்படும். இந்தியாவில் சூரியன் மறைந்த பிறகு அல்லது அடிவானத்திற்கு கீழே இருக்கும்போது நிகழ்வதால், ஆர்வமுள்ளவர்கள் நாசாவின் நேரலை மூலமாகவோ அல்லது கூகுளின் இந்தச் சிறப்பு அனிமேஷன் வழியாகவோ இந்த விண்வெளி அதிசயத்தை டிஜிட்டல் முறையில் கண்டு மகிழலாம்.